செவ்வாய், 27 ஜூன், 2017

அய்யனார் சிற்பம்

வசிஷ்ட நதியில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது.














சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கினர். அப்போது சாந்தி, 35, என்பவருக்கு அருள் வந்தது. அவர், 'கெட்டிமுதலி கோட்டை அருகே உள்ள வசிஷ்ட நதியில், புதைந்து கிடக்கும் சிலையை மீட்டால், மழை வரும்' என்றார். மதியம், 2:00 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள், பூஜை பொருட்கள், சேவல் கோழியுடன், சம்போடை வனம் அருகே, வசிஷ்ட நதிக்கு வந்தனர். பொக்லைன் மூலம், அங்கு பள்ளம் தோண்டியபோது, உருவம் இல்லாத உருளையான ஒன்றரை அடி உயரத்தில் கல் கிடைத்தது. அதற்கு பூஜை செய்து, கோழியை பலி கொடுத்தனர். இதையடுத்து, அங்கிருந்த மதுரகாளியம்மன் கோவில் பூசாரி ராஜாமணி, 60, 'ஆற்றின் கரை பகுதியொட்டி, ஆறு அடி ஆழத்தில் சிலை இருந்ததாக நினைவுள்ளது' என்றார். அந்த இடத்தை தோண்டியபோது, மூன்று அடி உயரம், இரண்டு அடி அகலத்தில், அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வன் தலைமையிலான அதிகாரிகள், அய்யனார் சிலையை, தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து, தொல்பொருள் ஆய்வாளர் ஆறகளூர் வெங்கடேசன் கூறியதாவது: ஆத்தூர் வசிஷ்ட நதியில் கண்டெடுக்கப்பட்டது, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை. மனைவியர் இன்றி தனிச்சிற்பமாகவும், கழுத்து, கை, காது உள்பட உடல் பகுதியில் அதிக அளவில் ஆபரணம் உள்ளது. கையில் செங்கோல், பெரிய ஜடாபாரம் (தலையில் உள்ள முடி), இடது கால் மடக்கியும், வலது கால் தொங்கவிட்டபடி, சிலை நேர்த்தியாக உள்ளது. இச்சிலையை பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக