சனி, 5 ஆகஸ்ட், 2017

ஏற்காடு மாரமங்கலம் பன்றிகுத்திபட்டான் நடுகல் புதிய கற்காலகருவிகள்










ஏற்காடு மாரமங்கலம் காட்டுபன்றி குத்திபட்டான் நடுகல் புதிய கற்கால கருவிகள்



கடந்த சனிக்கிழமை அன்று 29 ஜூலை அன்று கலைச்செல்வன் ஆசிரியர் மற்றும் பெருமாள் ஆசிரியர் இருவரும் ஏற்காடு பகுதியில் தேடலை மேற்கொண்டனர் .மோசமான சாலையிலும் கடுமையாக முயற்சித்து கல்வெட்டுக்களையும் ,ஒரு பன்றிகுத்தி பட்டான் நடுகல்லையும் கண்டறிந்தனர். அடுத்த நாள் ஞாயிற்று கிழமை நம் சேலம் வரலாற்று ஆய்வு மைய குழுவானது விழுப்புரம் வீரராகவன் அய்யாவை அழைத்துக்கொண்டு ஏற்காடு கிளம்பியது.
80% நல்ல சாலை 20% செங்குத்தான மிகச்சரிவான மண்சாலையில் பயணித்தோம். 13 ஆம் நூற்றாண்டு கோயிலில் 4 கல்வெட்டுக்கள் படி எடுத்தோம். கல்வெட்டுடன் கூடிய காட்டுபன்றி குத்தி பட்டான் கல்லில் உள்ள எழுத்துக்களையும் படித்தறிந்தோம்.
Kalai SelvanKaliyappan SrinivasanPerumal Madhu NavinPonnambalam ChidambaramJeevanarayanan SelvakumarPeriyar MannanOotykrishna
ஆகிய சேலம் வரலாற்று ஆய்வு மைய உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.
காட்டுப்பன்றி குத்தி பட்டான் கல், மற்றும் புதிய கற்கால கருவிகள் பற்றிய செய்தி இன்றைய தினமணி, காலைக்கதிர்,தினகரன் செய்திதாட்களில் செய்தி வந்துள்ளது .செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன், தினமணி திரு பெரியார் மன்னன், தினகரன் திரு சேகர் அவர்களுக்கும் சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் ,முகநூல்,வாட்சப்பில் உள்ள சான்றோர்களும் கொடுக்கும் உற்சாகமும் ஆதரவுமே ,கருத்துரைகளுமே எங்களை உத்வேகப்படுத்தி மேலும் தேடலை ஆர்வமுடன் செய்ய தூண்டுகிறது.உங்கள் அனைவருக்கும் நன்றி.
பத்திரிக்கை செய்தி:
ஏற்காடு அருகே 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்கால கருவிகள் மற்றும் ,கல்வெட்டுடன் கூடிய காட்டுபன்றிகுத்தி பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் மாரமங்கலம், கேளையூர் என்ற மலை கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகளும் நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெருமாள் ,கலைச்செல்வன்,சீனிவாசன்,பொன்னம்பலம்,ஜீவநாராயணன்,பெரியார் மன்னன் ,கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு ஏற்காடு அருகே சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மாரமங்கலம், வடக்கு மலையான் ,கேளையூர் போன்ற மலைகிராமங்களில் தொல்லியல் ஆய்வை மேற்கொண்டது. அப்போது வடக்குமலையான் கோயிலில் 50க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகளும்.கேளையூர் கிராமம் பிள்ளையார் கோயிலில் 50க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகளும்,மாரமங்கலம் கிராமத்தில் கல்வெட்டுடன் கூடிய காட்டுப்பன்றிகுத்தி பட்டான் நடுகல்லும் கண்டறியப்பட்டது.
புதிய கற்கால கருவிகள்
புதிய கற்கால கருவிகள் 6 ஆயிரம் ஆண்டுகள் முதல் 10,000 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்தவை. புதிய கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் கரடுமுரடான கற்கருவிகளை செதுக்கியதோடு மட்டுமல்லாது அவற்றை தேவைக்கு ஏற்ப தேய்த்து வழவழப்பாக செய்து கொண்டான். கற்கோடாரிகளும், செதுக்கும் கருவிகளும் நல்ல தோற்றம் உடையவையாகவும் வழவழப்பாகவும் செய்யப்பட்டதுடன் குத்தும் முனையும் கூர்மையாக்கப்பட்டது. கீழ் பகுதி கையில் பிடிக்க ஏதுவாகவும் வெட்டும் முனைகளாகவும் செய்யப்பட்டது. பல்லாயிரம் வருடங்களாக கற்கருவிகள் செய்ய தேர்ச்சி பெற்றதால் புதிய கற்காலத்தில் சிறந்த கருவிகள் செய்ய மனிதன் பழகி கொண்டான். சிறிய உருண்டை வடிவ கற்கள் விலங்குகளை தொலைவில் இருந்து தாக்கவும் கொட்டைகளை உடைக்கவும் பயன்பட்டுள்ளன. பெரிய உருண்டை வடிவ கற்கருவிகள் ஆயுதங்களை வழவழப்பாக்கவும் கூர் தீட்டவும் பயன்பட்டுள்ளன. .பழைய கற்கால கருவிகளை விட புதிய கற்கால கருவிகள் அதிகம் கிடைப்பதால் அந்த காலத்தில் வாழ்ந்த மனிதனின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை உணரலாம். புதிய கற்கால மனிதன் வாழ்ந்த காலகட்டத்தில் உணவுப்பயிர்களையும் பயிரிடும் முறையையும் அறிய துவங்கியுள்ளான். ஆடு, மாடுகளை வீட்டு விலங்காக பழக்கியும் பயன் பெற்றதோடு நிரந்தரமாக இருப்பிடங்களையும் அமைத்துக்கொண்டு கிராம வாழ்கைக்கும் அடி கோலியுள்ளான்.இந்த கிராமங்களில் உள்ள இந்த புதிய கற்கால கருவிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்குள்ள ஓடைகளிலும், விளை நிலங்களில் உழவு ஓட்டும்போதும் கண்டெடுக்கப்பட்டு இப்போது தெய்வமாக இந்த மக்களால் வழிபாடு செய்யப்படுவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.
காட்டுபன்றிகுத்திபட்டான் நடுகல்
மாரமங்கலம் கிராமத்தில் வாணிக்கொம்பை என்ற இடத்தில் கந்தன் என்பவரின் தோட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுடன் கூடிய காட்டுப்பன்றி குத்திப்பட்டான் நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டது.
ஒரு வீரன் நீண்ட ஈட்டியால் ஒரு காட்டுப்பன்றியை குத்தி கொல்வதை போல் சிற்பம் உள்ளது. வீரனின் கொண்டை வலது புறம் சாய்ந்துள்ளது. காதுகளில் பாடகம் என்ற காதணி உள்ளது.மீசை மேல்நோக்கி முறுக்கியபடி காட்டப்பட்டுள்ளது.இடையில் அழகிய முடிச்சுடன் கூடிய இடையாடையும் குறு வாளும் உள்ளது. வீரன் கையில் உள்ள ஈட்டி பெரியதாகவும் கூர்மையாகவும் உள்ளது.இடது காலில் வீரக்கழல் உள்ளது.வலிமையோடு வீரன் குத்திய ஈட்டி காட்டுப்பன்றியின் உச்சந்தலையில் குத்தி கழுத்துக்கு கீழே இறங்கியுள்ளது.வீரனின் வலது பக்கம் துப்பாக்கி ஒன்று காட்டப்பட்டுள்ளது.இந்த வீரனின் வேட்டை நாய் இரண்டும் நடுகல்லில் உள்ளது. ஒரு நாயானது காட்டுப்பன்றியின் மேல் ஏறி நின்று அதன் காதை கடித்து குதறுகிறது. மற்றொரு நாய் பன்றியின் பின் காலை கடித்து தாக்கி வீரனுக்கு வேட்டையில் உதவியதை காட்டும்படி நடுகல் சிற்பம் உள்ளது.
அப்போது விளைநிலங்களில் உள்ள பயிர்களை அழித்த காட்டுப்பன்றியை வேட்டையாட தன் இரு வேட்டை நாயுடன் இந்த வீரன் சென்றுள்ளான். அப்போது நடந்த சண்டையில் அந்த காட்டுப்பன்றியை கொன்று வீரனும் இரு நாய்களும் இறந்து போய் உள்ளனனர். அந்த வீரனுக்காலவும் வேட்டை நாய்களுக்காகவும் எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.
கல்வெட்டு செய்தி
இந்த நடுகல்லில் 19 வரிகளுடன் கல்வெட்டு செய்தி உள்ளது.
மாரமங்கலம் அண்ணாமலைக்கவுண்டர் என்பவர் இந்த நடுகல்லை செய்து வைத்துள்ளார். வாணிக்கொம்பை என்ற இடத்தில் உள்ள விளைநிலங்களில் பயிர்களை காட்டுப்பன்றிகள் அழித்து நாசம் செய்து வந்துள்ளன. காத்தா கவுண்டன் என்பவரின் மகன் நக்க கவுண்டன் என்பவர் அந்த காட்டுப்பன்றியை கொன்று தானும் இறந்துள்ளார். இவருக்கு வைக்கப்பட்ட வீரக்கல் இதுவாகும்.
இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் அரிய வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினார்கள்.
#சேலம்வரலாற்றுஆய்வுமையம்
#ஆறகழூர்பொன்வெங்கடேசன்

http://timesofindia.indiatimes.com/city/salem/prehistoric-stone-weapons-discovered-near-yercaud/articleshow/59922264.cms

http://www.dinamani.com/tamilnadu/2017/aug/04/6000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2749288.html
http://www.dinamalar.com/news_detail.asp?id=1826483

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=748907




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக