புதன், 15 நவம்பர், 2017

கல்வராயன்மலை புதியகற்கால கருவிகள்


தலைவாசல் அருகே புதிய கற்காலகருவிகள் கண்டுபிடிப்பு


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே கல்வராயன் மலையில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலகருவிகள் கண்டறியப்பட்டுள்ளது.

சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ,ஆசிரியர்கள் பெருமாள், கலைச்செல்வன்,மருத்துவர் பொன்னம்பலம், சீனிவாசன்,கவிஞர் மன்னன்,ஜீவநாராயணன் ஆகியோர் அடங்கிய குழு தலைவாசல் அருகே கல்வராயன் மலையில் உள்ள மேல்பாச்சேரி ,தாழ்பாச்சேரி கிராமகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சிறு விநாயகர் கோயிலில் 50 க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் கண்டறியப்பட்டன. இக்கருவிகள் மூலம் முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்கை நிலையை அறிய முடிகிறது.

புதிய கற்காலமக்கள்


ஆதிமனிதன் காடுகளில் வாழ்ந்த போது வேட்டையாட கற்களால் ஆன கருவிகளையும் உறுதியான மரக்குச்சிகளையும் பயன்படுத்தி வந்தான். தொல் பழங்காலமானது பழைய கற்காலம், நுண்கற்காலம், புதியகற்காலம், பெருங்கற்காலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த கற்கருவிகள் புதிய கற்கால வகையை சேர்ந்தது. புதிய கற்காலமானது 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. பழைய கற்காலத்தில் வழக்கிலிருந்த கரடு முரடான கற்கருவிகளை விடுத்து நன்கு தேய்த்து வழவழப்பாக்கி மெருகேற்றிய கற்கருவிகளை பயன்படுத்திய காலத்தை புதிய கற்காலம் என அழைக்கின்றனர். இக்காலத்தில்தான் மனித இன வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.புதிய கற்கால மக்கள் தனக்கென ஒரு குடியிருப்பு பகுதியை உருவாக்கிக்கொண்டு ஓரிடத்தில் நிலையாக வாழ தலைப்பட்டனர்.இவர்கள் குழி வீடுகளிலும் வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவிலான புல்வேய்ந்த கூரைவீடுகளிலும் வசித்தனர் என்பதை பையம்பள்ளி (வேலூர் மாவட்டம்) மற்றும் மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி) அகழ்வாய்வுகள் தெளிவாக்குகின்றன. இவர்கள்தான் முதன் முதலில் வேளாண்மை செய்ய ஆரம்பித்தனர் என கருதலாம். பையம்பள்ளி அகழ்வாய்வில் மக்கிய நிலையில் கொள்ளு,கேழ்வரகு,பச்சைப்பயிர் ஆகிய தானியங்கள் கிடைத்துள்ளன. வேட்டையில் நிறைய விலங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கற்காலகருவிகளை நட்டு வழிபட்டுள்ளனர். இந்த வழக்கம் இன்று வரை கூட தொடர்கிறது.இக்கால மனிதர்கள்தான் முதன்முதலில் இறந்தவர்களை தன் வீடுகளுக்கு அருகே அடக்கம் செய்யும் முறையை ஆரம்பித்தனர்.கல்வராயன் மலை அறுநூத்துமலையில் வாழும் மக்களிடம் இன்று வரை இந்த வழக்கம் தொடர்கிறது.இறந்தவர்களை இவர்கள் தெய்வமாகவும் வணங்கினர்.

புதிய கற்காலகருவிகள்


நன்கு வழவழப்பாக தேய்க்கப்பட்ட புதிய கற்காலகருவிகள் வேட்டையாடவும் கொட்டைகளை நசுக்கவும்,தானியங்களை அரைக்கவும் பயன்படுத்தியுள்ளனர். கைக்கோடாரிகள்,அம்மிக்கல்,குழவிக்கல்,கூர்முனைக்கருவிகள்,கத்திகள்,வெட்டுக்கருவிகள்,கிழிப்பான்கள்,தேய்ப்புக்கற்கள்,போன்ற வடிவங்களில் இவை கிடைக்கின்றன.
மேல்பாச்சேரி கிராமத்தில் ஒரு விநாயகர் சிலை அருகே 18 புதிய கற்காலகருவிகள் காணப்படுகின்றன. இதில் 11 நல்ல நிலையிலும் 7 சற்று சிதைந்த நிலையிலும் உள்ளது.இவற்றின் நீளம் 15 செ.மீ அகலம் 10 செ.மீ ஆகும். 33 செ.மீ நீளமுடைய குழவிக்கல் ஒன்றும் காணப்படுகிறது.இக்கருவிகள் இன்றும் இக்கிராம மக்களின் வழிபாட்டில் உள்ளது. வேட்டையாடும் வழக்கம் குறைந்து விட்டாலும் திருவிழா காலங்களில் இக்கருவிகளை சுத்தம் செய்து வழிபடுகிறார்கள். தாழ்பாச்சேரி கிராமத்தில் ஒரு மரத்தின் அடியில் உள்ள விநாயகர் சிலை அருகே முப்பதுக்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் உள்ளன. விநாயகர் சிலைகள் பிற்காலத்தில் இங்கு வைக்கப்பட்டிருக்கலாம். இக்கிராமங்களின் அருகே உள்ள ஓடைகளிலும் விளைநிலங்களிலும் கற்கருவிகள் கிடைப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மேல்பாச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த துர்க்கை, காளி சிற்பங்கள் ஒரே பலகை கல்லில் புடைப்பாக செதுக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக